20.7 C
Norway
Saturday, September 14, 2024

எதற்கும் துணிந்தவன் மூன்றே நாளில் வசூலில் சொல்லி அடித்த சூர்யா

சூர்யா ரசிகர்களின் இரண்டு ஆண்டுகள் தவத்திற்கு பிறகு தற்போது சூர்யா அவர்கள் திரையரங்குகளில் பெரிய திரையில் தோன்றியிருக்கிறார். இதற்கு முன் அவர் நடித்த ஜெய்பீம், சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் சூர்யாவை பெரிய திரையில் காண முடியவில்லை என்ற வருத்தம் அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த வருத்தத்தைப் போக்கும் விதமாக சூரியாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் தவத்தைக் கலைத்து இருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. பாண்டிராஜ் இயக்கம் சூர்யாவிற்கு எடுபடவில்லை என்று தான் கூறவேண்டும். விமர்சன ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை இந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பெற்றிருக்கிறது . உப்புச் சப்பு இல்லாத தமிழ் சினிமா பலமுறை பார்த்து சலித்த ஒரு திரைக்கதையை சூர்யாவை வைத்து இயக்கி இருக்கிறார் பாண்டிராஜ் என்று அவர் மீது பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இருந்தும் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் போல இதுவும் ஒரு சீரியல் போல படம் சென்று கொண்டிருந்தாலும் வசூல் ரீதியாக அண்ணாத்த திரைப்படம் தப்பித்தது போல இந்த எதற்கும் துணிந்தவன் படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.அப்படி குடும்பம் குடும்பமாக பல திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் வரவால் இந்த எதற்கும் துணிந்தவன் படம் காப்பாற்றப்பட்டு வருகிறது. அப்படி வரும் ரசிகர்களால் தமிழக திரையரங்குகளில் கடந்த மூன்று நாட்களில் நல்ல வசூலை இந்த படம் பெற்றிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்டது. சுமார் 75 கோடி ரூபாய் பட்ஜெட் ஆக நிர்ணயம் செய்யப்பட்டு எடுத்த இந்த படம் தற்போது தமிழகத்தில் முதல் நாள் மட்டும் 15 கோடியே 45 லட்சமும், இரண்டாவது நாள் வசூலாக 13 கோடியே 75 லட்சமும், மூன்றாவது நாள் வசூலாக 18 கோடியே 75 லட்சமும் வசூல் செய்திருக்கிறது. ஆக ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் மட்டும் இந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 47 கோடியே 95 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறது . இந்த மூன்று நாட்களுக்குள் இவ்வளவு தொகை வசூல் ஆகி உள்ளதால் படக்குழு நிம்மதி அடைந்து இருக்கிறது .

உண்மையில் குடும்ப ரசிகர்களால் படம் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அந்த கருத்துக்களை மிக ஆழமாக சொல்லி இருக்கலாம். அதை விட்டுவிட்டு ஹீரோவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உப்புமா கதையாக இந்த படம் அமைந்துவிட்டதால் வெகுவாக இந்த படம் மக்களை ஈர்க்கவில்லை. இருப்பினும் இந்த படத்தை தயாரித்திருக்கும் சன் பிக்சர்ஸ் எப்படியாவது போட்ட பணத்தை எடுத்து விடுவார்கள் என்றுதான் தெரிகிறது.

அந்த அளவிற்கு படம் வெளியான பிறகு அவர்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் கண்கூடாக தெரிகிறது. சமூக வலைதளப் பக்கங்களில் இந்த படத்தின் மீதான தாக்கத்தை மக்களுக்கு அதிகப்படுத்தி வருகிறது. இதுபோக படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகள் போன்றவை இருப்பதால் படம் கண்டிப்பாக போட்ட பணத்தை எடுத்து விடும் என்றும், சூரியாவின் ஹாட்ரிக் வெற்றியாக இல்லாவிட்டாலும் ஆறுதல் வெற்றியாக இந்த படம் அமையும் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்