பிரான்சிலிருந்து வருகை தரவுள்ள சுதந்திர தமிழீழத்திற்கான சங்கத்தினருடனான சந்திப்பும் கலந்துரையாடலும்
நாள்: 24.10.26 (சனிக்கிழமை)
நேரம்: 09:30 – 13:00
இடம்: Aurdalslia skole
பெர்கன் ஈழத்தமிழ் மக்களுக்கு ஓர் அன்பான அழைப்பும் வேண்டுகோளும்
அன்புடையீர், வணக்கம்!
பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Association Free Tamil Eelam – AFTE அமைப்பின் சார்பாக, நோர்வேயின் பெர்கன் நகரில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளாகிய உங்கள் அனைவருக்கும் எமது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சிலினால் (ECOSOC) அங்கீகரிக்கப்பட்ட 340-க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களுடனும், ஐரோப்பிய அனைத்துலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 24-க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. உலகெங்கும் தமிழீழத்திற்கான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதும், ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வேண்டிப் பிராந்திய மற்றும் சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகளில் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பதுமே எமது முதன்மை நோக்கங்களாகும்.
எமது மக்கள் எதிர்கொண்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கும், வெளிப்படும் வெகுஜனப் படுகுழிகளுக்கும் இன்னுவரை நீதி கிடைக்கவில்லை. இந்த நீதிக்கான பயணம் தாயகத்தில் மட்டுமன்றி, புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழரின் பங்களிப்பினாலும் வலுப்பெறுகிறது. நாம் ஒன்றிணைந்து, ஒருமித்த குரலில், சட்டரீதியான வழிகளில் செயற்படும்போது மட்டுமே சர்வதேச சமூகம் எமது கோரிக்கைகளைக் செவிமடுக்கும் என்பது எமது உறுதியான நம்பிக்கை.
எமது அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மன்றங்களில் எழுத்துமூல அறிக்கைகள், முறையீடுகள் மற்றும் வாய்மொழி உரைகளைச் சமர்ப்பித்து வருகிறது. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, பொறுப்புக்கூறல், நினைவுகூரல் உரிமை, எமது பண்பாட்டு மரபுரிமைகளின் பாதுகாப்பு ஆகியவற்றைச் சட்ட அடிப்படையில் முன்னெடுப்பதே எமது
வழிமுறையாகும். இவ்வாறான பணிகள் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நேரடியான பங்களிப்புடன் நடைபெறும்போதுதான் முழுமையான வலிமையைப் பெறுகின்றன.
இந்த நோக்கத்துடன், எதிர்வரும் 2026 ஒக்டோபர் 24-ஆம் திகதி சனிக்கிழமை, பிரான்ஸிலிருந்து ஆறு பேர் கொண்ட எமது தூதுக்குழு சிறப்பாகப் பெர்கன் நகருக்கு வருகை தரவுள்ளது. உங்களை நேரில் சந்தித்து, உங்கள் கருத்துக்களைக் கேட்டறிந்து, எமது பணிகளையும் எதிர்காலத் திட்டங்களையும் பகிர்ந்து கொள்வதே இப்பயணத்தின் நோக்கம்.
எமது தாயகத்தில் இன்னும் தொடரும் நிலப்பறிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகளின் துயரம், நினைவேந்தல் மீதான தடைகள் ஆகியவற்றுக்கு எதிராகவும் சர்வதேச அரங்குகளில் தொடர்ந்த குரல் எழுப்ப வேண்டிய கடமை எம் அனைவருக்கும் உண்டு. தனித்தனியாகச் செயற்படுவதைவிட, ஒருங்கிணைந்து செயற்படும்போதே எமது முயற்சிகள் அதிக பலனைத் தரும்.
நோர்வே வாழ் தமிழ் சமூகம் தாயகத்தின் துயரங்களை என்றும் மறவாது, கல்வி, பண்பாடு, சமூகப் பணிகள் ஆகிய துறைகளில் பெருமைக்குரிய பங்களிப்புகளை வழங்கி வருவதை நாம் நன்கு அறிவோம். அந்த அனுபவமும் ஒற்றுமையும் எமது பொது இலக்கை அடைவதற்குப் பெரும் உந்துசக்தியாக அமையும். ஆகவே, உங்களுடன் நேரடியாக உரையாடி, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, நீடித்த உறவை உருவாக்குவதையே நாம் விரும்புகிறோம்.
இச்சந்திப்புகளில் பின்வரும் விடயங்கள் குறித்து உங்களுடன் கலந்துரையாட விரும்புகிறோம்: சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகளில் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு பங்களிக்கலாம்; நோர்வே அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்புகளை எவ்வாறு வலுப்படுத்தலாம்; இளந்தலைமுறையினரை இந்தப் பணிகளில் எவ்வாறு ஈடுபடுத்தலாம்; எதிர்கால ஒருங்கிணைந்த செயற்பாடுகளை எவ்வாறு திட்டமிடலாம் என்பனவாகும். உங்கள் அனுபவங்களும் ஆலோசனைகளும் எமக்கு மிகவும் மதிப்புமிக்கவை.
எனவே, பெர்கன் வாழ் தமிழ் உறவுகளிடம் நாம் பணிவன்புடன் முன்வைக்கும் வேண்டுகோள்கள்:
-
பெர்கனில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள், கோவில் மற்றும் சமூக அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மூத்தோர் மற்றும் செயற்பாட்டாளர்களை எமது குழு சந்திப்பதற்கு உதவுதல்.
-
ஒரு சிறிய கலந்துரையாடல் அல்லது சந்திப்புக்கான இடம், நேரம் ஆகியவற்றை ஒழுங்கு செய்ய ஒத்துழைத்தல்.
-
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலும் வாழும் தமிழ் உறவுகள், அமைப்புகளுடன் எம்மை இணைத்து, அங்கும் சந்திப்புகளை ஏற்பாடு செய்ய வழிகாட்டுதல்.
-
இச்செய்தியை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் பகிர்ந்து, மேலும் பலரை இணைத்தல்.
உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் பங்களிப்பும் எமது நீதிக்கான போராட்டத்திற்கு மிகப்பெரிய பலமாகும். எமது குழுவை அன்புடன் வரவேற்று, இந்தச் சந்திப்புகளை வெற்றிகரமாக்க உதவுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
எமது குழு பெர்கனில் தங்கியிருக்கும் குறுகிய காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், இயன்றவரை முன்கூட்டியே சந்திப்புகளைத் திட்டமிட விரும்புகிறோம். ஆகவே, அம்முன்னேற்பாடுகள் எவ்வாறு விரைவாகத் தொடங்கிக் கொள்ளலாமோ, அவ்வளவுக்கு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் எவ்வித அரசியல் கட்சி சார்பும் இன்றி, மனித உரிமைகள் மற்றும் நீதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறோம். எனவே, அனைத்துத் தரப்பினரையும் மதிப்புடன் சந்தித்து உரையாட ஆவலாக உள்ளோம்; உங்கள் வசதிக்கேற்ப நேரத்தையும் இடத்தையும் மாற்றியமைக்கவும் தயாராக இருக்கிறோம்.
தொடர்புகொள்ள:
மின்னஞ்சல்: associationfreetamileelam@gmail.com
நன்றி! நீதிக்கான எமது பயணத்தில் இணைந்து பயணிப்போம்.
அன்புடன், நன்றியுடன்,
சுதந்திர தமிழ் ஈழத்துக்கான சங்கம் (Association Free Tamil Eelam)
-



