4.3 C
Norway
Friday, April 19, 2024

இறுதி வணக்கம்! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நோர்வே

இறுதி வணக்கம்!
தாயக விடுதலைக்கான பெரும்பணியில் எம்முடன் இணைந்து பங்காற்றிய ஒரு மனிதனை பேர்கன் மண் இன்று இழந்துவிட்டது. மண்ணின் விடுதலையை நேசித்த ஒரு மனிதனை சாவு சடுதியில் காவுகொண்டுவிட்டது.

தயா அண்ணை இனி இல்லை.
பேர்கன் மண்ணின் பொதுநிகழ்வுகள் எங்கும் காணும் முகம் சட்டென மறைந்துபோய் விட்டது.
ஏன் போனீர்கள் தயா அண்ணை, யாரிடமும் சொல்லிக்கொள்ளாது எங்கு போனீர்கள்?
தமிழீழ மண்மீட்பிற்காக விடுதலைப்புலிகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் உங்களையும் எங்களையும் இணைத்து ஒரே திசையில் பயணிக்க வைத்தது. எங்கள் எல்லோரையும்விட வயதில் மூத்தவர் நீங்கள். ஆனாலும் உங்கள் வயதை ஒத்தவர்களுக்கு முன்னுதாரணமாக நின்றீர்கள்.
மாவீரர்கள் நிகழ்த்திக் காட்டிய வீரமும் அர்ப்பணிப்பும் தமிழீழ மண்ணில் ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்தி இருந்த காலமது. ஒரு பக்கம் போராட்டத்தின் பொருளாதார தேவைகளும் இன்னொரு பக்கம் போரால் இடம்பெயர்ந்த அகதிகளின் நலன்சார்ந்த பணிகளும் புலம்பெயர் மக்களின் உழைப்பையும் பங்களிப்பையும் வேண்டிநின்ற நேரம் அது.
போராட்டத்தின் நெருக்கடிகள் நிறைந்த ஒரு காலத்தில், மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தன்னால் இயன்ற பணியைச் செய்யவேண்டுமென்ற அகத்தூண்டுதலே தயா அண்ணையை பேர்கன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பக்கம் நிற்கத் தூண்டியது. நாம் முன்னெடுத்த அனைத்து பணிகளிலும் கால நேரம் கருதாமல் உழைத்தவர் அவர். தமிழர் புனர்வாழ்வுக் கழக பேர்கன் கிளைப் பொறுப்பாளராக இடம்பெயர்ந்த அகதிகளின் புனர்வாழ்வுப் பணியிலும் அவர் முன்னின்று உழைத்தார்.

தயா அண்ணை,
எங்கள் எல்லோருக்கும் ஒரு கனவு இருந்தது. ஆயிரம் வருடங்களாக எம் இனம் தன் நெஞ்சில் சுமந்து திரிந்த கனவு அது. விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் உயிர்ச்சுடர் ஏந்தி களத்தில் நின்று போராடிய காலத்தில் அக்கனவினை எய்திவிடுவோம் என நம்பினோம். நாம் வாழும் நாடுகளிலெல்லாம் எம்மால் இயன்ற பணிகளை ஆற்றினோம்.
இன்று உங்களைப் போன்ற ஒவ்வொருவர் மறைவின்போதும் மீண்டும் மீண்டும் இழப்பின் வலியை உணர்கிறோம்.

போய் வாருங்கள் தயா அண்ணை!
என்றும் மாறா அதே புன்னகையுடன் போய் வாருங்கள்!
உங்கள் இழப்பில் துயருறும் குடும்பத்தினருடன் இணைந்து நாமும் அஞ்சலிக்கிறோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நோர்வே

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்