7.8 C
Norway
Friday, May 3, 2024

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைவிமர்சனம்

7 ஸ்க்ரீன் லலித் குமார் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்ததா?இல்லையா? வாங்க பார்க்கலாம்..

கதைக்களம்
விஜய் சேதுபதி { ராம்போ }வின் குடும்பத்தின் மீது சாபம் இருக்கிறது. இதனால், அந்த குடும்பத்தில் உள்ள யாருக்கும் திருமணம் நடக்காமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்கள். இந்த களங்கத்தை நீக்க வேண்டும் என்று நினைத்த விஜய் சேதுபதியின் தந்தை, ஒரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு ‘ரஞ்சன்குடி முருகேச பூபதி ஒஓதிரன்’ என்கிற ராம்போ குழந்தையாக பிறக்கிறார். ராம்போ பிறந்த அதே நாளில் அவர்களின் குடுபத்தின் மேல் உள்ள சாபத்தினால் ராம்போவின் தந்தை மரணமடைகிறார். கணவரின் மரணத்தை கேள்விப்படும் ராம்போவின் தாய்க்கும் உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதனால், தனது மகனை தவிர்த்து அனைத்து விஷயங்களையும் மறந்துவிடுகிறார்.

பிறக்கும் போதே தந்தையின் மரணத்திற்கு காரணமாகிவிட்டான் என்று ராம்போவின் மீது துரதிர்ஷ்டசாலி எனும் பட்டம் சுமத்தப்படுகிறது. இதனால், தன்னுடைய துரதிர்ஷ்டம் அம்மாவையும் ஏதாவது செய்து விடுமோ என்று என்னும் ராம்போ தனது அம்மாவை விட்டு பிரிந்து வாழ்கிறார். இப்படி காலங்கள் ஓடிவிட இளமை பருவத்தை அடையும் ராம்போ, பகலில் டாக்சி ஓட்டுநராகவும், இரவில் கிளப் பவுன்சராகவும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், தீடீரென ஒரே நாளில் நயன்தாரா { கண்மணி } மற்றும் சமந்தா { கதீஜாவை } வெவேறு இடங்களில் சந்திக்கிறார் ராம்போ. அந்த நொடியில் இருந்தே அவர்கள் இருவரின் மீதும் காதலில் விழுகிறார். இருவருடனும் பழகி வரும் விஜய் சேதுபதியிடம், சமந்தா நயன்தாரா இருவரும் தங்களது காதலை ஒரே நேரத்தில் கூறுகிறார்கள்.

இருவரின் காதலால், தான் ஒரு துரதிர்ஷ்டசாலி என்று நினைத்துக்கொண்டிருந்த ராம்போவின் வாழ்க்கையில் முதல் முறையாக அவர் எதிர்பார்த்த நல்ல விஷயங்களையும் நடக்க துவங்குகிறது. இப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில், ராம்போ கதீஜாவை காதலிக்கும் விஷயம் கண்மணிக்கு தெரியவர, கண்மணியை ராம்போ காதலிக்கும் விஷயம் கதீஜாவிற்கு தெரியவர, இருவரில் ஒருவரை தான், நீ காதலிக்க வேண்டும் என்று கண்மணியும், கதீஜாவும், ராம்போவிடம் கூறுகிறார்கள். இதன்பின், ராம்போவின் முடிவு என்ன? கடைசியில் என்ன நடந்தது? ராம்போ இருவரில் ஒருவரை காதலித்து திருமணம் செய்தாரா? அல்லது இருவரையும் திருமணம் செய்துகொண்டாரா? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்
96 படத்திற்கு பிறகு தனித்து நின்று, ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. ராம்போ கதாபாத்திரத்தில் இவரை விட வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்ற அளவிற்கு நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். இரு பெண்களிடம் காதலில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஆணின் நிலையை அழகாக தனது நடிப்பில் வெளிப்படித்துள்ளார். காதல், செண்டிமெண்ட், டைலாக் டெலிவரி, பாசம், நகைச்சுவை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.

கண்மணியாக வந்த நயன்தாராவும், கதீஜாவாக வந்த சமந்தாவும் அழகிய நடிப்பில் நம் மனதை கொள்ளையடிக்கிறார்கள். காதலனுக்காக இருவரும் போட்டிபோட்டுக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் வண்ணத்தில் நடித்துள்ளார்கள். கண்மணியின் தங்கை, தம்பியாக வரும் இருவரின் நடிப்பும் க்யூட். லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி, நடிகர் பிரபு படத்தின் முக்கிய தூண்களாக படத்தை தாங்கி நிற்கிறார்கள். நடிப்பில் களமிறங்கியுள்ள நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீஷாந்தின் நடிப்பு ஓகே.

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் தனது வெற்றியை பதித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். எடுத்துக்கொண்ட கதைக்களம் கொஞ்சம் கூட தவறாக போய்விடக்கூடாது என்பதிலும், குடும்பத்துடன் அனைவரும் பார்க்க்க வேண்டும் என்பதற்காகவும், முகம் சுளிக்கும் அளவிற்கு காட்சிகள் எதுவும் வைக்காமல், அழகாக மூவரின் காதல் கதையை கையாண்டுள்ளார். அதற்காக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள்.

25வது படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத்துக்கு முதலில் வாழ்த்துக்கள். வழக்கம் போல் பாடல்களாலும், பின்னணி இசையாலும் நம் மனதை கட்டிபோட்டுவிட்டார் அனிருத். எஸ்.ஆர். கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தை காதலிக்க வைக்கிறது. ஏ. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் சூப்பர்.

க்ளாப்ஸ்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பு

விக்னேஷ் சிவனின் இயக்கம்

அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும்

ஒளிப்பதிவு, எடிட்டிங்

காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் காட்சிகள்

பல்ப்ஸ்

குறை சொல்லும் அளவிற்கு படத்தில் எதுவும் இல்லை

மொத்தத்தில் காத்துவாக்குல விஜய் சேதுபதி செய்த இரண்டு காதலும் சக்ஸஸ்.. பலமுறை பார்க்கலாம்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்